நாலடியார் - ஒரு பார்வை ( 1 )
நாலடியாரின் தோற்றமும் வரலாறும் சிறப்பு மிக்கது.
நாலடியார் என்பது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்கள் அடங்கிய ஒரு தமிழ் நீதி நூல்.
இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும், அதாவது சங்கம் மருவிய காலத்தில் (கி.பி. 250 ஐ ஒட்டிய காலம்) உருவான நூல் தொகுப்பில் அடங்கும்.
“நாலடி” என்ற பெயர், ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளைக் கொண்டதாலே வந்தது.
இந்நூல் நானூறு வெண்பாக்கள் கொண்டது. எனவே, “நாலடி நானூறு” என்றும் அழைக்கப்படுகிறது.
நாலடியார் பாடல்களை இயற்றியவர்கள்
நாலடியார் பாடல்கள் சமண முனிவர்களால் இயற்றப்பட்டவை எனக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு பாடலும் தனிப்பட்ட புலவரால் இயற்றப்பட்டதாகவும், இவை தொகுக்கப்பட்ட நூலாக பின்னர் ஆக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
இந்நூலை பதுமனார் என்பவர் தொகுத்து, தருமர் என்பவர் அறம், பொருள், இன்பம் என மூன்று பாகங்களாக பிரித்ததாக கூறப்படுகிறது.
நாலடியார் வரலாற்றுப் பின்னணி பின்வருமாறு கூறப்படுகிறது.
நாலடியார் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியது. இது திருக்குறளுக்கு இணையான நீதி நூலாகப் போற்றப்படுகிறது.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் “நாலும்” என்பது நாலடியாரை, “இரண்டும்” என்பது திருக்குறளை குறிக்கும்.
மதுரை நகரத்தில், உக்கிரப்பெருவழுதி என்ற அரசனால் ஆதரிக்கப்பட்ட சமண புலவர்கள் இந்நூலை இயற்றியதாகவும் கூறப்படுகிறது.
நூலின் தனிச்சிறப்புகளாக பின்வருவன சுட்டிக் காட்டப்படுகிறது
வாழ்க்கை அனுபவங்கள், நீதி, பக்தி, துறவு, மரண உணர்வு போன்ற ஆழமான கருத்துகளை எளிய உவமைகளில் சொல்லும் தன்மை.
வெண்பா வடிவில், ஒவ்வொரு பாடலும் சுயமாக நிறைவடையும்.
திருக்குறளின் இரு அடிகள் போல, நாலடியார் நான்கு அடிகளில் கருத்தைத் தெளிவாகச் சொல்கிறது.
அறம், பொருள், இன்பம் என மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் மொழிபெயர்ப்பு மற்றும் புகழாக கூறப்படுவதாவது.
ஜி.யூ.போப் (G.U. Pope) என்பவர் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்நூல், வேளாண் வேதம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது விவசாய வாழ்க்கையின் உவமைகளைப் பயன்படுத்தி நீதி கூறுகிறது.
சரி இப்பதிவில் நாலடொயாரின் முதற்பாடலான கடவுள் வாழ்த்தையும் அதன் விளக்கத்தையும் பார்ப்போம் வாருங்கள்
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
பாடலின் எளிய விளக்கம்
வானத்தில் தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறையும் நேரமும் யாராலும் கணிக்க முடியாது.
அது எப்போது தோன்றும்? எப்போது மறையும்? நமக்குத் தெரியாது.
அதேபோல், மனிதனின் பிறப்பும் இறப்பும் அதன் நேரம், சூழ்நிலை, காரணம் யாராலும் அறிய முடியாது.
இறப்பு நிச்சயமானது. ஆனால் அது எப்போது வரும் என்பது மர்மம்.
அதனால், இந்த உடம்பு அழிவதற்குள்,
நாம் நம் மனதில் விரும்பும் நல்ல காரியங்கள் நிறைவேற வேண்டும் என்ற ஆசையுடன், பூமியில் பாதம் படியாத (அதாவது, எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும்) அருகக் கடவுளை,
தாழ்ந்து பணிந்து, பக்தியுடன் தொழுவோம்.
இதன் முக்கிய கருத்து
வாழ்க்கை மற்றும் இறப்பு கணிக்க முடியாதவை.
அழிவு உறுதி; ஆனால் நேரம் மர்மம்.
நல்ல செயல்கள் செய்யும் வாய்ப்பு இருக்கும்போது, அதை தவறவிடக்கூடாது.
கடவுளை பக்தியுடன் தொழுவது, நம் மனதின் நன்மைகளை நிறைவேற்றும் வழி.
இது இன்றைய தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்லலாம்?
“வாழ்க்கை ஒரு வானவில்லைப் போல. எப்போது தோன்றும், எப்போது மறையும் தெரியாது.
ஆனால் அது அழகாக இருக்கும்போது, அதைப் பார்த்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நம் ஆசைகள் நிறைவேற, நம் செயல்கள் நல்லவை ஆக, நம் மனம் அமைதியாக இருக்க, நம்முள் நிறைந்திருக்கும் அந்த அருகனை நம்பி, பணிவுடன் தொழுவோம்.”
இங்கே எமது இன்றைய தலைமுறையினருக்கு இறையருள் , இறைவனைத் தொழுவது என்பது ஒரு அர்த்தமற்ற செயலாகத் தென்படலாம்.
இறைவன் என்றால் அது எமது உள்மனமே !
எம் மனசாட்சியே எமது இறைவன் என்பதே ஆன்மீகப் பெரிய ஆசான்களினால் கண்டறியப்பட்டது.
என் இனிய இளம் உள்ளங்களே ! எமது தமிழ் பாரிய படைப்புகளினுள் புதைந்திருக்கும் வாழ்வின் ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள்.
அது நாம் நடக்கும் பாதையை நேரிய வழியில் செம்மைப்படுத்தும்.
சரி இந்தக் கடவுள் வாழ்த்தை எளிய முறையில் கவிதையாக்கினால் ?
வானம் வில்லாய் மின்னும் போது,
வாய்மை இல்லா சொற்கள் தோலும்,
காலம் நனையா நிலம் போல,
நம் உள்ளம் வறண்டே போகும்.
சென்னியில் வணங்கி நாமும்,
சிந்தனையைத் தூய்மை செய்யும்,
நம் உள்ளத்தில் கடவுள் வாழ,
நம் செயல்கள் ஒளி தரட்டும்.
இந்தக் கடவுள் வாழ்த்தில் முக்கியமான செய்திகளாக ,
வாய்மை, கடவுள், சிந்தனை, சோதனை, நெஞ்சம்
ஆகியவற்றின் கலப்பினை குறிக்கிறது.
இதனைக் கருத்தில்.கொண்டு அதனை ஒரு வெண்பா வடிவாக்கிப் பார்க்க விளைந்ததின் விளைவு
வான்விழி வில்லென மின்னும் பொழுதினில்,
வாய்மைதான் தோயா நிலம் காணும்;
உள்ளத்தின் ஒளியே வழி காட்டும் –
உணர்வுகள் வழியெனும் பாதைதனில்
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே எமது பழம் பெரும் இலக்கியங்களை என் பாமரப் பார்வையினூடு பார்ப்பதைப் பகிர்ந்து அதனை இளையோர் மத்தியில் எடுத்துச் செல்லலாமோ எனும் ஒரு நப்பாசையே இம்முயற்சி.
தவறிருந்தால் மன்னிக்கவும்.
சேய் ஆக்கிய சமையல் தானே ! தாய் நீங்கள் மன்னிக்க மாட்டீர்களா என்ன ?
மீண்டும் வருவேன்
அன்பன்
சக்தி சக்திதாசன்
Comments
Post a Comment