மகாபாரதம் கதையா ? கற்பனையா ? காவியமா ?

மனசாட்சியின் தேரில் பயணிக்கும் மகாபாரதம் ஒரு தத்துவப் பார்வை

“மகாபாரதத்தை  சுருக்கமாக சொல்ல முடியுமா?”  எனும் கேள்வி ஒருபுறம்.

அந்த காவியத்தின் ஆழமான உண்மையை வாழ்வின் நடைமுறையோடு விளங்கிக் கொள்ள முயற்சிக்க முற்படுவது மறுபுறம்.
 
பாரதப் போர் என்பது வரலாற்று நிகழ்வாக மட்டுமல்ல,அது மனித மனத்தின் உள் போராட்டங்களை பிரதிபலிக்கும் தத்துவக் காவியமாகக் கூடப் பார்க்கலாம்

குருக்ஷேத்ரத்தின் மண்ணில் எழும் பல கேள்விகள்

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில், பெரும்பாலான ஆண்கள் உயிரிழந்தனர் என்ற தகவல் புதிதல்ல.  

அந்த மண்ணில் நிகழ்ந்த  பல நிகழ்வுகளில் இருந்து கேள்விகள் மனதில் எழுகின்றன:  

“இங்கேதான் கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்டார்களா?”  

“இங்கேதான் கிருஷ்ணர் பார்த்தசாரதியாக தேர் ஓட்டினாரா?”

அந்த மண்ணை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மனதுக்குள் விளக்கங்கள் விளைகின்றன.

“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே.” என்று சொல்லும் வகையில் உள்ளம் எமைப்.பார்த்து சிரிக்கும்

அப்போது தெளிவாகும் ஆன்மீகத் தத்துவம் எம்மோடு பேசும்.

மந்தகாசப் புன்னகையுடன் உள்ளமே எம்முடன் பேச ஆரம்பிக்கும்.

“மகாபாரதம் என்பது உண்மை சம்பவம் அல்ல. அது ஒரு தத்துவம். அதை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.” என்கிறது உள்ளத்தின் ஆழத்தில் உருளும் விளக்கங்கள்.

பஞ்சபாண்டவர்கள் என்பது நம் ஐம்புலன்கள் கண், காது, மூக்கு, வாய், மெய்.  

கௌரவர்கள் என்பது இந்த புலன்களை தினமும் தாக்கும் தீமைகள் ஆசை, கோபம், பொய், பொறாமை, அகந்தை.  

இந்த புலன்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தீமைகளை எதிர்த்து போரிடும் திறன் அவற்றில் உள்ளது.

அப்படியானால் கிருஷ்ணர்  அது யார் ?

ஓ அவர்தான் எமது  மனசாட்சி எனும்  தேரோட்டியோ ?

இந்த போரில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு பதில் என்ன ?

“முடியும்…! எப்போது தெரியுமா? கிருஷ்ணர் தேரை ஓட்டும்போது.”

ஓ இது என்ன புதுசா இருக்கே !

கிருஷ்ணர் என்பது மனசாட்சி, ஆன்மா, வழிகாட்டி.  

வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்தால், பயம் தேவையில்லை.  
உண்மையை உணர, மனசாட்சியின் வழிகாட்டுதலே முக்கியம்.

சரி துரோணர், பீஷ்மர் அவர்கள் தான் வளர்ச்சியின் சாயல்களோ ?

தீயவர்களுக்காக போரிடும் பெரியவர்கள் குறித்து எழும் சந்தேகத்திற்கு பதில்:  

வளர்ச்சியுடன், மூத்தவர்களைப் பற்றிய பார்வை மாறுகிறது.  

ஒருகாலத்தில் குற்றமற்றவர்களாக எண்ணியவர்கள், தவறுகளுடன் இருப்பதை உணர முடிகிறது.  

அவர்கள் நன்மைக்காக இருக்கிறார்களா, அல்லது தடுக்கும் வகையில் இருக்கிறார்களா என்பதை தீர்மானிக்க வேண்டியது தனிப்பட்ட சிந்தனையின் பணி.

அதுசரி கர்ணன் அந்தப் பாத்திரத்தின் சிருஷ்டியின் அர்த்தம் என்ன ?

கர்ணன் என்பது ஆசை, மோகம்.  

அவன் புலன்களின் சகோதரன்.  

தவறு என்பதை அறிந்தும், சாக்குபோக்குகள் மூலம் தீமைகளின் பக்கம் நிற்கிறான்.  

மனது ஆசைப்படும் போது, தீயவற்றைத் துணைபோகும் இயல்பை கர்ணன் எனும் பாத்திரம் பிரதிபலிக்கிறது.

இங்கே கீதை நமக்கு உணர்த்த முற்படும்  பாடம் என்ன ?

இந்த சிந்தனையின் முடிவில், மனம் தரையில் அமர்கிறது.  

களைப்பினால் அல்ல…  

கீதை உணர்த்தும் பாடத்தின் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.

மனசாட்சியின் தேரில் பயணிக்கும் வாழ்க்கை,  

தீமைகளை எதிர்க்கும் புலன்கள்,  
ஆசையை அடக்கும் அறிவு,  

மூத்தவர்களின் சாயல்களை புரிந்து கொள்ளும் நுண்ணறிவு 

இவை அனைத்தும் மகாபாரதத்தின் தத்துவப் போராட்டங்கள்.

மகாபாரதம் எனும் இந்தத் தத்துவ பொக்கிஷத்தை எம்மத்தியில் புதைத்துச் சென்ற முன்னோர்களின் உயர்ந்த நோக்கத்தைச் சரியாக புரிந்து கொள்ள முயற்சித்தால் ......... 

இவையெல்லாம் இதிகாசமா ? உண்மையா ? கற்பனையா எனும் தத்துவ விசாரணைகளின் தேவை அற்றுப்போகிறது இல்லையா ?

உண்மைகள் மனத்தில் எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றன.

அன்பன்
சக்தி சக்திதாசன்

Comments

Popular posts from this blog

தத்வமஸி

ஸ்ரீ அரவிந்தரின் 75வது நினைவுதினம் .

ஆறுமுகநாவலரின் 146 வது நினைவுதினம்