ஒரு பாசுரம் ! ஒரு பார்வை ! ஒரு பாடல் !

அன்பானோர்களே !

இன்று மார்கழி முதல்நாள். ஒரு மாற்றமாக ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை இந்த சாமானியனின் சிற்றறிவுக்கு எட்டியவாறு பார்க்கும் ஒரு முயற்சி.

திருப்பாவை: முதலாவது பாசுரம் 


​பாசுரம்

​மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர் மல்கும் ஆய்ப்பாடிக் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

​மார்கழி நோன்பும் பொது வாழ்வும் எனும் பார்வையில் திருப்பாவையின் முதல் அடி
​திருப்பாவையின் முதலாவது பாசுரம், வெறும் நீராடல் அழைப்பாக இல்லாமல், ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனைக்கும், நம்முடைய சமுதாயப் பொறுப்புகளுக்கும் அடிகோலும் ஒரு மகத்தான தொடக்கமாகும்.
    
இது ஒரு ஆன்மீக எழுச்சி இயக்கத்திற்கான ஆண்டாளின் முதல் அழைப்பு.

​பரம்பொருளை அடைதலின் எளிமை.

​மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ஆண்டாள் மார்கழி மாதத்தின் சிறப்பைப் பேசுகிறாள்.
    
மார்கழி என்பது ஆண்டின் மிகச் சிறந்த மாதம் (கீதையில் கண்ணன், தான் மாதங்களில் மார்கழியாக இருப்பதாகக் கூறுகிறான்). ஆன்மீகத்தில், இந்த மாதம் 'கர்மங்கள் ஓய்ந்து, தியானம் மேலோங்கும்' காலத்தைக் குறிக்கிறது. 

'மதி நிறைந்த நன்னாள்' (பௌர்ணமி) என்பது, ஞானம் முழுமையாகப் பொங்கி வழியும் சுப நாளைக் குறிக்கிறது. 

அதாவது, இறைவனை அடைவதற்கான நேரம், நமக்கு இப்பொழுதே கனிந்துள்ளது.
     
அதற்கு உகந்த காலம் என்று காத்திருக்கத் தேவையில்லை.

​நீராடப் போதுவீர் போதுமினோ....
    
நீராடல் என்பது வெறும் உடல் தூய்மை அல்ல,அது 'பாவக் கழிவு' என்ற பொருள் தரும் புனித ஸ்நானம். 

உலக இச்சைகள், ஆணவம், கர்ம வினைகள் ஆகியவற்றிலிருந்து மனதைத் தூய்மைப்படுத்துவதே உண்மையான நீராடல்.
    
இறைவனை நாடும் பக்தர்காள்! வாருங்கள், இந்த அசுத்தங்களைக் களைய முற்படுங்கள் என்று ஆண்டாள் அழைக்கிறாள்.

​நாராயணனே நமக்குப் பறை தருவான்,இங்கே பறை என்பது 'மோட்சம்', 'இறைவனின் அருள்' அல்லது 'நிலையான இன்பம்' (புருஷார்த்தம்) ஆகியவற்றைக் குறிக்கிறது. 

உலக இன்பங்களுக்காக நாம் யாரையும் நாடத் தேவையில்லை.
    
அனைத்துக்கும் காரணமான, அனைத்தையும் ஆளும் நாராயணனே (இறைவனே) நமக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பான் என்ற சரணாகதித் தத்துவத்தை இந்த வரி உறுதிப்படுத்துகிறது.

பொது வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் கருத்துக்கள்
​திருப்பாவையின் இந்த ஆரம்ப வரிகள் நம்முடைய பொது வாழ்வு மற்றும் சமூகச் செயல்பாடுகளில் மூன்று முக்கிய பாடங்களை வழங்குகின்றன.

​அ. சமூக ஒருங்கிணைப்பு (சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்)
​ஆண்டாள், தன்னுடன் நோன்பிருக்க வரும் பெண்களை 'சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்' என்று அழைக்கிறாள்.
   
அதாவது, செல்வமும் செழிப்பும் நிறைந்த ஆய்ப்பாடியில் உள்ள இளம்பெண்களே! என்று அழைப்பது, ஒரு சமூக ஒற்றுமையைக் குறிக்கிறது.

​பொது வாழ்வுத் தொடர்பாக பார்க்கையில்ஒரு பொதுவான நோக்கத்தை (இறைவன் அருள் அல்லது சமுதாய முன்னேற்றம்) அடைய, நாம் தனித்தனியாகச் செயல்படுவதை விட, சமூகமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 

எந்தவொரு சமுதாய மேம்பாட்டு இயக்கமும் (கல்வி, சுகாதாரம், சமத்துவம்) வெற்றியடைய, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு இளைஞர்களும், செல்வமும் அறிவும் உள்ளவர்களும் கைகோர்க்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

​ஆ. தலைமைப் பண்பும் சரணாகதியும் (நந்தகோபன் குமரன்) என்பது
​பாசுரத்தில் கண்ணன், பல சிறப்பான அடைமொழிகளுடன் குறிப்பிடப்படுகிறான் .

கூர்மையான வேல் கொண்ட நந்தகோபனின் வீரன் (நீதியை நிலைநாட்டுபவன்), யசோதையின் இளஞ் சிங்கம் (வலிமை மற்றும் ராஜ கம்பீரம்), கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் (அழகும் அமைதியும் கொண்டவன்).

​பொது வாழ்வுத் தொடர்பு இங்கே என்ன ,?
த்ச்லைமைப் பண்பு என்பது வலிமை (சிங்கம்), நீதியை நிலைநாட்டுதல் (கூர்வேல்), மற்றும் அனைவருக்கும் பொதுவான அமைதியான அணுகுமுறை (மதியம் போல் முகத்தான்) ஆகியவற்றின் கலவையாக இருக்க வேண்டும். 

நாம் நம்முடைய பொது வாழ்வில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது, அல்லது நாமே ஒரு பொறுப்பை ஏற்கும்போது, இந்த அறம் சார்ந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். 

மேலும், பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்ய வேண்டும்.
    
அதாவது, பறை தருவான் நாராயணன் என்ற நம்பிக்கையுடன், நாம் நம்முடைய கடமையைச் சரணாகதி மனப்பான்மையுடன் செம்மையாகச் செய்ய வேண்டும்.

​இ. தெளிவும் நோக்கமும் (பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்):
​'பாரோர் புகழ'  உலகம் நம்மைப் பாராட்டும்படி இந்த நோன்பில் ஈடுபட வேண்டும் என்று ஆண்டாள் கூறுகிறாள். 

இதன் ஆன்மீக அர்த்தம், நம்முடைய பக்தி யாருக்கும் பயன்படாமல் போகக் கூடாது, அது உலகிற்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதாகும்.

நம்முடைய ஒவ்வொரு செயலும், அது பொது நலன் சார்ந்ததாக இருக்கும்போது, வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். 

ஒரு சமூகச் சேவை அல்லது அரசாங்கப் பணி, உலகமே பாராட்டும்படி நேர்மையுடனும், தியாகத்துடனும் அமைந்தால் மட்டுமே அது உண்மையான வெற்றியைப் பெறும்.
    
சமுதாயத்தில் நாம் வாழும் வாழ்க்கையே மற்றவர்களுக்கு வழிகாட்டியாக  அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை இந்த வரி வலியுறுத்துகிறது.

​இந்த முதல் பாசுரம், நம்முடைய ஆன்மீகப் பயணம் தனிப்பட்டது அல்ல, அது சமூகப் பொறுப்புகளுடன் இணைந்து செல்லும் ஒரு சமூகக் கடமை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

அன்பன்
சக்தி சக்திதாசன்

Comments

Popular posts from this blog

தத்வமஸி

ஸ்ரீ அரவிந்தரின் 75வது நினைவுதினம் .

ஆறுமுகநாவலரின் 146 வது நினைவுதினம்