சிவலிங்கம்
சிவலிங்கம்
மௌனமாக வழிகாட்டும் மோட்சத்தின் ஒளி
சிவன் என்றால் மௌனம்.
மௌனம் என்றால் அமைதி.
அமைதி என்றால் ஆனந்தம்.
அந்த ஆனந்தத்தின் வடிவமே சிவலிங்கம்.
“சிவம்” என்றால் என்ன?
சிவம் என்பது வெறும் ஒரு கடவுள் பெயர் அல்ல.
அது மங்களம், அழிவில்லாத அமைதி, பற்றற்ற நிலை.
“லிங்கம்” என்றால் அடையாளம்.
அதாவது, மங்களத்தின் அடையாளம் அதுவே சிவலிங்கம்.
மனிதன் பிறந்ததின் நோக்கம்தான் என்ன ?
பணம், பதவி, புகழ்… இவை எல்லாம் நிலையானவை அல்ல.
மனத்தின் மாசுகளை கழுவி,
சுத்தமான சித்தத்துடன் சிவத்தை உணர்வதே வாழ்க்கையின் உண்மை நோக்கம்.
உபநிடதம் சொல்வது என்ன?
“நான் உன்னை வணங்குகிறேன்” என்று சித்தத்தில் சிவனை வைத்துவிட்டால்,
தேவைகள் நம்மைத் தேடி வரும்.
அதனால்தான், சிவனுடன் இணைந்த அம்பிகை சர்வமங்களாவாக காட்சியளிக்கிறார்.
மங்களம் எங்கிருந்தாலும், சிவன் அங்கே இருக்கிறார்.
இயற்கையின் மௌன வடிவமே சிவலிங்கத்துள் அடக்கம்.
கயிலாயத்தில் பனியாகத் தெரியும் சிவன்.
தாருகா வனத்தில் பூமியில் விழுந்த ஈசனே லிங்கமாக மாறினார் என்பது ஒரு ஆன்மீகக் கதை.
மார்க்கண்டேயனும், கண்ணப்பனும் சிவலிங்கத்தின் அருளால் மாறினார்கள் என்பதும் புராண செய்திகள்.
“பற்றற்ற நிலை” என்பதே சிவலிங்கம் சொல்லும் பாடம்
பிறக்கும் போது எதுவும் வராது.
இறக்கும் போது எதுவும் செல்லாது.
ஆனால் நடுவில் பந்தங்கள், ஆசைகள், போராட்டங்கள்.
சிவலிங்கம் சும்மா நின்றபடியே சொல்கிறது,
“என்னிடம் எதுவும் ஒட்டிக்கொள்ளாது…”
அபிஷேகத் தண்ணீர் அது நிலைக்காது .
அணிகலன் அதுவும் சிவலிங்கத்தில் தங்காது
ஆடை அதையும் லிங்கத்தில் உடுத்த இயலாது
அதுதான் தியாகம்.
அதுதான் மோட்சம்.
சுக–துக்கம் அதன் சமநிலையே சிவலிங்கம்.
வெயிலும், மழையும், பனியும் எது வந்தாலும் சிவலிங்கம் அசையாது.
அது சொல்லாமல் சொல்லும் செய்தி,
“சுக–துக்கங்களை சமமாகப் பார்.”
கண்ணன் கீதையில் சொன்னதை, சிவன் மௌனமாக லிங்க உருவில் நடத்திக் காட்டுகிறார்.
அசையாமல் நிற்கும் லிங்கமே பிரபஞ்சத்தின் அசைவின் மூலம்.
சிவனுக்கு உடல் இல்லை, மனம் இல்லை, இச்சை இல்லை.
இருந்தும் உலகம் முழுவதையும் இயக்குகிறார்.
ஆசை வந்தால் பந்தம் வரும்.
பந்தம் வந்தால் பிறவி நீளும்.
ஆசையை அறுத்தால் உடலே சிவமாக மாறும்.
மங்களமே மனித பாழ்வின் எந்நிகழ்வுகளுக்கும் நிறைவு.
அதுவே சிவலிங்கம்.
திருமணத்தில் மங்கள ஆரத்தி
திருவிழாவில் மங்கள வாத்தியம்
திரைப்படத்தில் கூட “சுபம்”
இந்த மங்களத்தின் முழுமையான வடிவமே சிவலிங்கம்.
உருவமற்ற பரம்பொருள்,
உனக்காக உருவம் எடுத்த நாள் அதுவே சிவலிங்கம்.
இதன் சாரம் தான் என்ன ?
பிடித்தால் – பந்தம்
விட்டால் – விடுதலை
தியாகமே – தெய்வத்தை அடையும் பாதை
சிவலிங்கம் – மௌனமாக பேசும் குரு
அன்பன்
சக்தி சக்திதாசன்
Comments
Post a Comment